ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால், எஸ்.ஜே சூர்யா நடித்த ‘மார்க் ஆண்டனி’, ஐந்தே நாட்களில் வசூலில் 50 கோடி ரூபாயை கடந்திருக்கிறது. படம் ரிலீஸ் ஆனதில் இருந்து தியேட்டர்களில், ரசிகர்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. நீண்ட நாட்களுக்கு பிறகு விஷாலுக்கு, இந்த படத்தின் மூலம் நல்ல ‘கம்பேக்’ கிடைத்திருக்கிறது.

விஷால் மகிழ்ச்சியாக உள்ள இந்த நிலையில், கோயம்புத்தூரைச் சேர்ந்த ஜாஸ்மின் மதியழகன் என்ற திருநங்கை, ‘மார்க் ஆண்டனி’ படத்தை தடை செய்ய வேண்டும் என புகார் தெரிவித்துள்ளார். மேலும், படத்தை இயக்கிய இயக்குநர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோவையில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளித்திருக்கிறார்.

மார்க் ஆண்டனி படத்தில், திருநங்கைகளை அவமதிக்கும் காட்சிகள் நிறைய உள்ளன. நகைச்சுவை என்ற பெயரில், திருநங்கைகளை கேலிப்பொருளாக சித்தரித்து அவமானப்படுத்தி உள்ளனர். எனவே, இந்த படத்தை தடை செய்ய வேண்டும். உடனடியாக, படத்தில் இடம்பெற்றுள்ள அந்த காட்சிகளை நீக்க வேண்டும். படத்தின் இயக்குநர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருநங்கை ஜாஸ்மின் மதியழகன் அளித்துள்ள புகாரால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.