ஆளும் கட்சி தரப்பில், சில முக்கிய ஏரியாக்களை கேட்கப்பட்டதால், அது தயாரிப்பாளர் தரப்பில் மறுக்கப்பட்ட நிலையில், அரசியல் அழுத்தங்களால், லியோ படத்தின் இசை விழா ரத்து செய்யப்பட்டதாக, சர்ச்சை எழுந்துள்ளது. அதுமட்டுமின்றி, லியோ இசை விழா ரத்து செய்யப்பட்டதற்கு பல காரணங்கள் கூறப்படுகிறது. லியோ படத்தின் இசை வெளியீட்டு விழாவை காட்டிலும், அது ரத்து செய்யப்பட்டதற்கான காரணங்கள் தரும் சஸ்பென்ஸ்களால், படத்துக்கு நல்ல பிரமோசன் கிடைத்து வருவதாகவும், கோலிவுட் வட்டாரம் மத்தியில் பரபரப்பாக பேசப்படுகிறது.லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா, வரும் 30ம் தேதி சென்னையில் உள்ள நேரு இண்டோர் ஸ்டேடியத்தில் நடப்பதாக இருந்தது. இதில் கலந்துகொள்ள லியோ படக்குழுவினர் மற்றும் விஜய் மக்கள் இயக்கத்தினர் மட்டுமே அனுமதிக்கப்படுவதாக தகவல் பரவியது. இதற்காக, 234 தொகுதிகளுக்கும் தலா 20 வீதம், இசைவிழா டிக்கெட்டுகள் அனுப்பப்பட்டதாக கூறப்பட்டது. வரும் சனிக்கிழமை விழா நடக்கும் என எதிர்பார்த்த நிலையில், நேற்றிரவு விழா நடக்காது என, படத் தயாரிப்பாளர் தரப்பில் அறிவிக்கப்பட்டது, விஜய் ரசிகர்களுக்கு பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது.உண்மையில் நடந்தது இதுதான். நேற்று மதியம் 2 மணி வரை, விழா நடத்தும் ஏற்பாடுகள் குறித்து, அந்த பகுதி போலீஸ் அதிகாரிகளுடன் படக்குழு ஆலோசனை செய்திருக்கிறது. நேற்று இரவு 7 மணிக்கு, போலீஸ் பந்தோபஸ்து குறித்த அனுமதி வாங்க, கமிஷனர் அலுவலகம் சென்ற போது, ஒன்னே மணி நேரம் படத்தின் தயாரிப்பாளர் லலித்குமார், ஜெகதீஷ் ஆகியோர் காக்க வைக்கப்பட்டுள்ளனர். பின்னர், அவர்களிடம் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், நிகழ்ச்சிக்கு வர உள்ளதாக, உளவுத்துறை ரிப்போர்ட் வந்துள்ளது. அவ்வளவு பேருக்கு எங்களால் பந்தோபஸ்து கொடுக்க முடியாது என்று போலீஸ் அதிகாரிகள் சொன்னதால், உடனடியாக இந்த தகவல் விஜய்க்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் விழாவை ரத்து செய்துவிடுங்கள், என்று கூறி இருக்கிறார்.