3340 கிலோ மீட்டர்..! கிடைத்ததை சாப்பிட்டு 3 நாட்கள் தொடர் பயணம்! மிசோரம் மாநிலமே கொண்டாடும் சென்னை ஆம்புலன்ஸ் டிரைவர்கள்! ஏன் தெரியுமா?

மிசோரம் மாநிலத்தை சேர்ந்தவர் லால்ரெம்சங்கா. இவருடைய வயது 28. இவர் அங்கிருந்து கடந்த சில வருடங்களுக்கு முன்னர் சென்னைக்கு வந்து பணியாற்றி வந்தார். எதிர்பாராவிதமாக 23-ஆம் தேதியன்று திடீரென்று லால்ரெம்சங்கா மாரடைப்பால் உயிரிழந்து போனார். ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் அவருடைய உடலை சொந்த ஊருக்கு எடுத்து செல்வதில் கடுமையான சிரமங்கள் இருந்தன.

இந்நிலையில் உடலை சொந்த ஊரில் அடக்கம் செய்வதற்கு அவசர ஊர்தியின் மூலம் செய்யலாம் என்று தமிழ்நாட்டு மிசோரம் நலச்சங்கம் குழுவினர் முடிவெடுத்தனர். அதன்படி இந்த பணியை செய்து முடிக்க ஜெயேந்திரன் மற்றும் சின்னத்தம்பி ஆகிய 2 ஓட்டுநர்கள் தாங்களாகவே முன்வந்து ஒப்புக்கொண்டனர். அவர்களுக்கு மொழி சார்ந்த விஷயங்களில் உதவுவதற்கு லால்ரெம்சங்காவின் நண்பர் முன்வந்தார்.

சென்னையிலிருந்து லால்ரெம்சங்காவின் வீடானது 3,340 தொலைவில் அமைந்துள்ளது. 2 நாட்களுக்கு முன்னால் அவசர ஊர்தியின் மூலம் ஓட்டுநர்கள் சென்னையில் இருந்து தங்களுடைய பயணத்தை தொடங்கியுள்ளனர். மேலும், இருவரும் 8 மணி நேரத்திற்கு மாறிமாறி ஊர்தியை ஓட்டியுள்ளனர்.

இந்தியா முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், கிடைக்கும் கடைகளில் உணவு வாங்கி சாப்பிட்டு சென்றுள்ளனர். மிசோரம் மாநிலத்திற்கு சென்றபோது, ஓட்டுநர்கள் தங்கள் மாநிலத்தை சேர்ந்த இளைஞரின் உடலை எடுத்து வருவது மக்களிடையே தெரிவிக்கப்பட்டிருந்தது.

அந்த மாநிலத்திற்குள் ஒவ்வொரு ஊருக்கு வழியாக சென்று கொண்டிருந்த போது மக்கள் கரகோஷத்துடன் அவசர ஊர்தியை வரவேற்றனர். மேலும் ஆந்திரா, மேற்கு வங்காளம் மேகாலயா ஆகிய மாநிலங்களின் வழியாக இறந்த இளைஞரின் உடல் சொந்த ஊருக்கு எடுத்து செல்லப்பட்டது. இந்த செய்தியானது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.