சினிமாவில் மட்டும்தான் வீரமா? – லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் இருப்பதே இவருக்கு தெரியாதோ- நடிகர் விஷாலுக்கு குவியும் கண்டனம்

நடிகர் விஷால் எஸ்ஜே சூர்யா நடித்த, ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய மார்க் ஆண்டனி படம், மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. 100 கோடி ரூபாய் வசூல் என்ற இலக்கை விரைவில் எட்ட உள்ளது. இதற்கிடையே மார்க் ஆண்டனி படம் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டு. நேற்று இந்தியில் ரிலீஸ் ஆனது. இந்தியில் மார்க் ஆண்டனி படத்தை வெளியிடுவதற்கு, மும்பையில் உள்ள சென்சார் போர்டு அதிகாரிகள், படத்தின் இந்தி வெர்சனுக்காக ரூ. 6.5 லட்சம் லஞ்சமாக வாங்கியதாக, வீடியோ ஒன்றில் பரபரப்பான புகாரை நடிகர் விஷால் கூறியுள்ளார்.இந்தியில் படத்தை திரையிடுவதற்கு ரூ. 3 லட்சமும், சென்சார் சான்றிதழுக்கு ரூ. 3.5 லட்சம் என, இரண்டு தவணைகளில் ரூ. 6.5 லட்சம் லஞ்சமாக தந்ததாகவும், இந்த மோசமான நிலை எந்த தயாரிப்பாளருக்கும் வரக்கூடாது என்று வீடியோவில் கூறியிருக்கிறார். இதுகுறித்து மகாராஷ்டிரா முதல்வர் மற்றும் பிரதமர் மோடி கவனத்துக்கும் எடுத்துச் செல்வதாகவும் விஷால் அந்த வீடியோவில் தெரிவித்திருக்கிறார். இதையடுத்து மத்திய அரசு, இந்த புகார் குறித்து விசாரிக்க மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தை சேர்ந்த அதிகாரிகளை, மும்பைக்கு அனுப்பி உள்ளதாக தெரிய வந்துள்ளது.ஆனால், நடிகர் விஷால் வெளியிட்டுள்ள வீடியோ குறித்து ரசிகர்கள் பலரும் எதிர்மறையாக விமர்சித்து வருகின்றனர். லஞ்சம் கேட்ட சென்சார் போர்டு அதிகாரிகளை, லஞ்சம் ஒழிப்பு துறை போலீசாரிடம் தெரிவித்து கையும் களவுமாக விஷால் பிடித்துக் கொடுத்திருக்கலாம். மும்பையில் அதிகாரிகளுக்கு 6.5 லட்சம் ரூபாயை லஞ்சமாக கொடுத்துவிட்டு வந்து, வீடியோவில் பேசுவது பெருமையல்ல. லஞ்சம் கொடுப்பதும் குற்றம் என்பது உங்களுக்கு தெரியாதா எனவும், விஷாலிடம் கேள்வி கேட்டு வருகின்றனர்.