லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடித்த லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 30ம் தேதி, சென்னையில் உள்ள நேரு உள்விளைாட்டு அரங்கில் நடக்கிறது. இவ்விழாவை, ஒரு மாநாடு போல நடத்த, நடிகர் விஜய் திட்டமிட்டுள்ளார். இவ்விழாவில் பங்கேற்க விஜய் ரசிகர்களுக்கு அதாவது விஜய் மக்கள் இயக்கத்தினருக்கு மட்டுமே அனுமதி தரப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் இருந்து வரும், விஜய் மக்கள் இயக்கத்தினர் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் லியோ இசை வெளியீட்டு விழாவில் கலந்துக்கொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் இருந்தும் விஜய் மக்கள் இயக்கம் சார்ந்த முக்கிய நிர்வாகிகள், இயக்கத்தின் அணிகள் சார்ந்த நிர்வாகிகள் என தொகுதிக்கு 20 பேர் வீதம், 5 ஆயிரம் பேர் வரை சென்னையில் நடக்கும் இசை வெளியீட்டு விழாவுக்கு வருகை தர உள்ளனர். ஒவ்வொரு தொகுதிக்கும், விழாவில் கலந்துகொள்ள 20 டிக்கெட் என ஒதுக்கீடு செய்து தரப்பட்டுள்ளது. இதுதவிர லியோ படத்தில் உடன் நடித்த நடிகர்கள், நடிகைகள், இயக்குநர், கேமராமேன், இசையமைப்பாளர், ஸ்டண்ட் மாஸ்டர்கள் உட்பட தொழில்நுட்ப கலைஞர்கள், தொழிலாளர்கள் என ஆயிரம் பேர் வரை மட்டுமே அனுமதிக்கப்பட உள்ளனர். சன் டிவி தவிர, மற்ற மீடியாக்களுக்கு அனுமதி இல்லை.லியோ இசை வெளியீட்டு விழா, முக்கால்வாசிக்கு மேல் ரசிகர்கள் பங்கேற்கும் மாநாடு போல நடத்த திட்டமிட்டுள்ளதால், விழாவில் விஜய் அரசியல் பேசலாம் என்ற ஆர்வம் ரசிகர்களிடையே அதிகரித்து வருகிறது. மேலும், ரஜினி ஜெய்லர் பட இசை வெளியீட்டு விழாவில் சொன்ன காக்கா- கழுகு கதைக்கு விளக்கம் தர போகிறாரா அல்லது நீண்ட நாட்களாக பரபரப்பை ஏற்படுத்தி வரும் சூப்பர் ஸ்டார் பட்டம் யாருக்கு என்ற பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக எதுவும் பேசுவாரா என பலவிதமான எதிர்பார்ப்புகள் காத்திருக்கின்றன. ரசிகர்களை வரவழைப்பதன் மூலம், இன்னும் லியோ படத்தின் ஆர்வத்தை அதிகரிக்கச் செய்யும் யுக்தியாக கூட இருக்கலாம் என்கின்றன கோலிவுட் வட்டாரங்கள்.